2 பேர் கொலை வழக்கில் 9 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு


2 பேர் கொலை வழக்கில் 9 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை புதுவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 March 2019 5:00 AM IST (Updated: 28 March 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே மணல் அள்ளி வந்தவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பான தகராறில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுச்சேரி,

பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் டிராக்டர், லாரி, மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்தது. அவர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இளங்கோ, கலியபெருமாள் ஆகியோர் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். இதையொட்டி இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கடந்த 13.10.2009 அன்று 2 கோஷ்டிகளும் நவாத்தோப்பு பகுதியில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பினரும் படுகாயம் அடைந்தனர். கலியபெருமாள் தரப்பை சேர்ந்த பரஞ்சோதி, ஞானபிரகாசம் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை தொடர்பாக பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோ, ஆறுமுகம், ரகு, ராஜ்குமார், அய்யனார், வெற்றிவேல், சுகன், பெரியண்ணன், கவிராஜ் ஆகிய 9 பேரையும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை புதுவை 2–வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நீதிபதி சுபா அன்புமணி நேற்று தீர்ப்பளித்தார்.

இதில் குற்றவாளிகள் இளங்கோ, ஆறுமுகம் உள்பட 9 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளங்கோ, ஆறுமுகம் உள்பட 9 பேரையும் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

எதிர்தரப்பை சேர்ந்த கலியபெருமாள், ராமமூர்த்தி, பூபதி, அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன், முருகன் ஆகிய 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி புதுவை கோர்ட்டில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story