கீழ்வேளூர் அருகே, தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


கீழ்வேளூர் அருகே, தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 March 2019 4:15 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூர், 

நாகை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக நாகை, கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனைத்து கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கொடி மேடைகளை சம்பந்தப்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பொக்லின் எந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கீழ்வேளூரை அடுத்த சிக்கல் ஊராட்சியில் உள்ள பனைமேடு, கீழகரையிருப்பு, பொன்வெளி ஆகிய குக்கிராமங்களிலும், சிக்கல் மெயின் சாலையில் உள்ள பல்வேறு கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் நேற்றுமுன்தினம் ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிக்கல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கட்சி கொடி மேடையை நாகை ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெற்றி செல்வன், கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ், ஊராட்சி செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலையில் அகற்ற முயன்ற போது அங்குள்ள தி.மு.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கொடி மேடை அமைக்கப்பட்டுள்ள இடம் கோவில் பட்டா இடத்தில் உள்ளது. எனவே கொடி மேடையை அகற்ற விட மாட்டோம் என்று தி.மு.க.வினர் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் நாகை உதவி கலெக்டர் கமல் கிஷோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோர்ட்டு உத்தரவின்படி கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். மீறினால் தடுக்கும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் தாங்களாகவே கொடி மேடையை அப்புறப்படுத்தி கொள்கிறோம் என்று கூறி ஊராட்சி நிர்வாகம் கொண்டு வந்த பொக்லின் எந்திரம் மூலம் கட்சி கொடி மேடையை அகற்றினார்கள்.

Next Story