தமிழகத்தில் விவசாயிகளின் எதிரியாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு


தமிழகத்தில் விவசாயிகளின் எதிரியாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 5:15 AM IST (Updated: 31 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விவசாயிகளின் எதிரியாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகிறது என்று மொடக்குறிச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–

மோடி ஆட்சியில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் விவசாயம் முற்றிலும் அழிந்து போய்விட்டது. ஈரோடு உள்பட 7 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களால் விவசாயம் அழிந்து நாடு பாலைவனமாக மாறும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளின் எதிரியாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அவர்களுக்கு குரல் கொடுக்கும் நபர் உங்கள் வேட்பாளர் கணேசமூர்த்திதான்.

நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த மோடி, 2 ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பை வழங்கவில்லை. தமிழகத்தில் தொழில் தொடங்கவும், இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் மாநில அரசு கேட்கும் கமி‌ஷன் தொகையை கேட்டு, மிரண்டுபோய் நிறைய தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலத்திற்கு சென்றுவிட்டன.

பெரிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் குஜராத்திற்கு சென்றுவிட்டன. இந்த நிறுவனங்களை தக்க வைத்திருந்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்திருப்பது முறையான திட்டமிடலால் சாத்தியமானதுதான் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான ஆட்சி வரும்போது, ஜனநாயகம் காக்கப்படும். ஊழல்கள் ஒழிக்கப்படும். குடிநீராதாரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் செழிக்கும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

இதேபோல் லக்காபுரம், சின்னியம்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, கணபதிபாளையம், விளக்கேத்தி, அறச்சலூர், அவல்பூந்துறை, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளிலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார்.

ஊஞ்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், கெயில் திட்டம் மற்றும் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியவர். உயர் மின்அழுத்த கோபுரம் அமைத்தால் ½ ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். பொள்ளாச்சி சம்பவத்தால் நாடே கொந்தளித்து உள்ளது.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து விட்டது. இதனால் இனி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. இதன்காரணமாக 19 மாவட்டங்களுக்கு தண்ணீர் இனி இல்லாமல் போவதோடு, 25 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலம் தரிசு நிலமாகும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற கார்ப்பரேட் கம்பெனிகள் இந்த நிலத்தை விலைக்கு வாங்குவார்கள். பல ஆண்டுகள் விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாழாகிப்போகும். இதை நான் (வைகோ) ஊர், ஊராக சென்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

மத்தியிலே மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய அரசு அமைய வேண்டும். அதற்கு தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் 40 வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் கொடுமுடி, காசிபாளையம், ஒத்தக்கடை, தாமரைப்பாளையம் ஆகிய பகுதிகளில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி, முன்னாள் எம்.பி.யாக இருந்தபோது பல நற்காரியங்களை செய்து உள்ளார். அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

அப்போது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுடன் கொடுமுடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மு.சின்னச்சாமி, அவைத்தலைவர் கந்தசாமி, ம.தி.முக மாவட்டச் செயலாளர் குழந்தைவேல், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத்தலைவர் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸ் பிரதிநிதி சிவசண்முக பாலசுப்பிரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.


Next Story