விவசாய கடன் ரூ.68 ஆயிரம் கோடியை காங்கிரஸ் ஆட்சி ரத்து செய்தது ப.சிதம்பரம் பேச்சு
நாடு முழுவதும் விவசாய கடன் ரூ.68 ஆயிரம் கோடியை காங்கிரஸ் ஆட்சி ரத்து செய்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
தேவகோட்டை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கேஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:– நரேந்திர மோடி 18 வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வருகிறார். அந்த இயக்கம் தான் காந்தியை கொலை செய்தது. நாட்டின் வடக்கே ஆர்.எஸ்.எஸ். நச்சு விதைகள் விதைக்கப்பட்டு விட்டன. அது தென்னிந்தியாவில் முடியவில்லை. விதைத்தாலும் இங்கு பயிர் வளராது. ஏனெனில் பெரியார் விதைத்த சுயமரியாதை இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள் இங்கு வளர்ந்து விட்டன.
ரூ.15 லட்சம் அனைவரது கணக்கிலும் போடப்படும் என்றார் மோடி. காங்கிரஸ் கட்சி அதை எதிர்த்தது, எப்படி சாத்தியமாகும் என கேட்டது. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார். இங்குள்ள யாருக்காவது அந்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா. ஆனால் அதற்கு மாறாக 2½ லட்சம் பேர் வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூரில் இருந்த 5 ஆயிரம் தொழிற்கூடங்கள் 500 ஆகிவிட்டன என தமிழக அமைச்சரே கூறியுள்ளார்.
100 நாள் வேலை வாய்ப்பை கொண்டு வருவோம் என காங்கிரஸ் கூறிய போது பா.ஜ.க.வினர் எப்படி சாத்தியம் என கேலி பேசினர். இன்று அந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூட ஊதியத்தை குறைத்து வழங்குகின்றனர் 2008–ம் ஆண்டு இந்தியா முழுவதும் விவசாய கடன் ரூ.68 ஆயிரம் கோடியை காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. கடைநிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப் போகிறோம் என அறிவித்து உள்ளோம். அதை முடியாது என பா.ஜ.க. கூறி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த அன்றே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் புலவர் பழனியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கண்ணகி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் உள்பட பலர் பேசினர். முடிவில் காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் அப்பச்சி சபாபதி நன்றி கூறினார்.