ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது
புதுவையில் மதுபானம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படைகளும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் முதலியார்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், வீரபத்ரசாமி ஆகியோர் மரப்பாலம் சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பைகளை வைத்துக்கொண்டு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்தனர்.
அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசவே சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர். அப்போது அந்த பைகளில் மதுபாட்டில்களை அவர்கள் வைத்திருந்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியிலும் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தனர். அவர்கள் அந்த மதுபாட்டில்களை புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு கடத்த திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தேங்காய்த்திட்டை சேர்ந்த பாலு (வயது 45), சென்னையை சேர்ந்த தியாகு (47) என்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 892 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். அதன்பின் அவர்களையும், மதுபானங்களையும் போலீசார் கலால்துறை வசம் ஒப்படைத்தனர்.