ஜெகதாப்பட்டினம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஜெகதாப்பட்டினம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 April 2019 11:00 PM GMT (Updated: 1 April 2019 8:38 PM GMT)

ஜெகதாப்பட்டினம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே அய்யம்பட்டினம், செல்லனேந்தல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இதனால் இப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தினர் இங்கு வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதையடுத்து போலீசார், பொதுமக்களிடம் நாங்கள் அதிகாரிகளிடம் பேசி உங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் வழங்காததை கண்டித்து அய்யம்பட்டினம், செல்லனேந்தல் கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பதாகை வைத்துள்ளனர். மேலும் சில வீடுகளில் கருப்பு கொடியும் கட்டி உள்ளனர். 

Next Story