பர்கூரில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பறிமுதல் முதியவர் உள்பட 2 பேர் கைது
பர்கூர் சோதனைச்சாவடியில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக முதியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சோதனைச்சாவடியில் பர்கூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் மோட்டார்சைக்கிளில், போலி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பீடி பண்டல்கள் இருந்ததும், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த சையது ஹவுஸ் பீர் (வயது 60), பாபு (38) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபு, சையது ஹவுஸ் பீர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போலி பீடி பண்டல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி பண்டல்களின் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.