வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் மனு


வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் மனு
x
தினத்தந்தி 4 April 2019 4:45 AM IST (Updated: 4 April 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ் ஆப் மூலம் வதந்தி பரப்புபவர்கள் மீது உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.

பனைக்குளம்,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பிரச்சினைக்குரிய தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதேபோல ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் குறித்தும் பல்வேறு விதங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளரும், தீர்மானக்குழு தலைவருமான மதுரை பொன்.முத்துராமலிங்கம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தேர்தல் நடைமுறைகளால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஒலி பெருக்கி பொருத்திய வாகனங்களுக்கு ஒவ்வொரு 3 நாட்களுக்கு பின்னர் புதுப்பிக்க வேண்டும் என்பது பல்வேறு விதத்தில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நிரந்தர அனுமதி வழங்க கோரிக்கை வைத்தோம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகஅளவில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் வதந்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியபட்டணத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பாட்டில் வீசப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்ததை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சமூக வலைதளங்களின் மூலம் வதந்திகளை பரப்புவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், தொழில் அதிபர் அன்சாரி, முன்னாள் வருவாய் அதிகாரி குணசேகரன், வக்கீல் அணி அமைப்பாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் பிரவீன், டி.கே.குமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.


Next Story