போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு - 4 பேர் கைது


போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு - 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2019 4:15 AM IST (Updated: 4 April 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் ரமணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (வயது 67). இவர் அயர்லாந்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு சொந்தமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இரும்பை பகுதியில் 9 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சென்னை ஓட்டேரியை சேர்ந்த முருகசாமி (வயது 52), வானூர் தாலுகா அச்சரம்பட்டை சேர்ந்த தசரதன் (50), பாரதகொடி (60), இரும்பையை சேர்ந்த துரைக்கண்ணு (52) உள்ளிட்ட 12 பேர் சேர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாக கூறப்படுகிறது. அபகரிக்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இதுகுறித்து நீலமேகன், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் முருகசாமி, தசரதன், துரைக்கண்ணு, பாரதகொடி ஆகிய 4 பேரையும் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 More update

Next Story