தமிழகத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் வைகோ பிரசாரம்


தமிழகத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் வைகோ பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2019 4:45 AM IST (Updated: 5 April 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும் என திருவாரூரில் வைகோ பிரசாரம் செய்தார்.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

பெரியார் பிறந்த ஈரோடு, அண்ணா பிறந்த காஞ்சீபுரம், கருணாநிதி பிறந்த திருவாரூர் ஆகியவை தமிழகத்தில் 3 முக்கிய நகரங்களாக விளங்குகிறது. தமிழையும், தமிழ் மண்ணையும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தபட்ட மக்களை காக்கவும் பாடுபட்டவர் கருணாநிதி. அவரை தேர்ந்தெடுத்த திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற செய்திட வேண்டும்.

தமிழகத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி மீண்டும் மலரும். மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழுவதை அழிக்கும் நோக்கத்துடன் கர்நாடகாவில் அணை கட்ட நரேந்திரமோடி அனுமதி அளித்தும், அதற்காக ரூ.5912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது. இதனால் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும்.

பூமிக்கு அடியில் இருந்து மீத்தேன், ஷேல் கியாஸ், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுப்பதால், இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி கிடைக்கும். ஆனால் நமது பூமி அழிந்து போகும். பசியும், பட்டினியாக அலையும் சூழ்நிலை ஏற்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏஜென்டாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

சரக்கு சேவை வரி மூலமாக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 லட்சம் பட்டதாரிகள், பெண்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். ஆனால் 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை. நீரவ்மோடி, விஜய்மல்லையா போன்ற பல தொழிலதிபர்கள் பல்லாயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ரூ.400 கோடி பருப்பு ஊழல் நடந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்திற்கு வந்தபோது ஆட்சியாளர்களுக்கு கமி‌ஷன் கொடுக்க முடியாமல் வேறு மாநிலங்களை நோக்கி தொழில் செய்ய சென்று விட்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி, 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் போன்ற பல்வேறு திட்டங்களை காங்கிரஸ்–தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. சாத்தியமான திட்டம் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். எனவே திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாகை நாடாளுமன்ற தொகுதியில் செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தி.மு.க. முன்னாள் எம்.பி. விஜயன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா, பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நிர்வாகிகள் தமிழ்வாணன், கபிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், காங்கிரஸ் நகர தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story