ஆண்டிப்பட்டியில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் - 13-ந் தேதி நடக்கிறது


ஆண்டிப்பட்டியில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் - 13-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வருகிற 13-ந்தேதி அ.தி.மு.க.-பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு தென்தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதற்காக ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள க.விலக்கு என்ற இடத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவிலான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் நடும் விழா துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக் கான வாக்குறுதிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் தென்தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆண்டிப்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பார்த்திபன் எம்.பி., அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சையதுகான், துணை செயலாளர் முருக்கோடைராமர், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் கொத்தாளமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story