அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி ஜி.கே.வாசன் பிரசாரம்

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற போவது உறுதி என்று ஜி.கே.வாசன் கூறினார்.
மதுரை,
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் பன்னீர் செல்வமும் சாதாரண மக்களுடன் பழகி அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற போவது உறுதி. அதனால் தான் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மீது தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். உலக அளவில் நாடு முன்னேறவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொடர வேண்டும். தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவாக உள்ளது. கேரளாவில் எதிராக உள்ளது. இவ்வாறு முரண்பாட்டுடன் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஒரு தொகுதியில் கூட சிறுபான்மையினரை நிறுத்தாத காங்கிரஸ் கட்சி, மதசார்பின்மை குறித்து பேச தகுதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் அளித்த பேட்டியில் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் மிகப்பெரிய 2 கூட்டணிகளுக்கிடையே போட்டி நடக்கிறது. அதில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றிக்கூட்டணியாக மாறும். இந்த தேர்தல் வாக்கு சதவீதம் அதிகம் உள்ள கட்சிகளுக்கும், வாக்கு சதவீதம் இல்லாத கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் தேர்தல். மத்தியில் நிலையான ஆட்சி வேண்டுமா, இல்லை நிலையற்ற ஆட்சி வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மத்தியில் பா.ஜ.க. அமைந்தால் நிலையான ஆட்சி அமையும். அதுவே காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஓராண்டுக்குள் தேர்தல் வரும். அவர்களுக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவர் எப்படி பிரசாரம் செய்தாலும் வெற்றி பெறமுடியாது என்றார்.






