காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய மந்திரிக்கு அ.தி.மு.க. கடிதம்


காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய மந்திரிக்கு அ.தி.மு.க. கடிதம்
x
தினத்தந்தி 6 April 2019 11:25 PM GMT (Updated: 2019-04-07T04:55:47+05:30)

காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்–க்கு முன்னாள் எம்.பி. ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. இணை செயலாளருமான ராமதாஸ் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்–க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

கடந்த 4–ந்தேதி இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் கோட்டுச்சேரி மற்றும் காரைக்கால் மேடு கிராமங்களை சேர்ந்த 18 மீனவர்களை கைதுசெய்து அவர்களது 3 பெரிய படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இச்செயல் நியாயமற்றது, சட்டவிரோதமானது. மனித உரிமைகளின் எல்லா கோட்பாடுகளையும் மீறியதாகும்.

தாங்கள் பதவியேற்றபின் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பல நல்லுறவு நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள். இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை தாக்கக்கூடாது, அவர்களை கைது செய்யும்போது மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை கையாளுவதற்காக ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு திட்டங்களுக்கான நிதி உதவியையும் அளித்து வருகிறது. இவ்வளவு இருந்தும் இலங்கை அரசு மீனவர்கள் வி‌ஷயத்தில் தொடர்ந்து அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. கடந்த மாதம் இலங்கையை சேர்ந்த 11 மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தவறி வந்தபோது இந்திய கடலோர காவல்படையும், கடலோர பாதுகாப்பு படையும் அவர்களை மீட்டு பாதுகாப்பாக இலங்கை கடற்படையிடம் நாகரீகமாக ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் அதே நாளில்தான் இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இது இலங்கை அரசின் கட்டுப்படாத மனிதநேயத்திற்கு உட்படாத நிலையைத்தான் காட்டுகிறது. எனவேதான் நிரந்தர தீர்வாக நாம் கச்சத்தீவை மீட்டெடுப்பதுதான் ஒரே தீர்வு என்ற கோரிக்கை வலுப்பெறுகிறது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டிப்பதோடு, தாங்கள் இந்திய கடற்படையின் மூலம் நமது மீனவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் இலங்கை அரசிடம் உடனடியாக பேசி ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக 18 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அவர்களது படகுகளை சேதாரமின்றி ஒப்படைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.


Next Story