நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் - வைகோ பேச்சு


நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் - வைகோ பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 5:00 AM IST (Updated: 9 April 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும் என்று வெள்ளோட்டில் வைகோ கூறினார்.

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.கணேசமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு அருகே வெள்ளோட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவரும், தமிழகத்தின் இன்றைய எதிர்க்கட்சி தலைவரும், நாளைய முதல்–அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி, மக்கள் நல்வாழ்வுக்காகவும், விவசாயிகள் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பவர். நேர்மையாகவும், சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் எளிதாக பழகுபவர். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பாடுபடுபவர் என்று மக்களிடம் நல்ல பெயர் சம்பாதித்து வைத்து உள்ளார். அவருக்கு இந்த தேர்தலில் உங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும்.

இந்த பகுதியில் உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்அழுத்த மின்கோபுரங்களால் ஏராளமான விவசாய குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு முதலில் இருந்தே வேட்பாளர் கணேசமூர்த்தி குரல் எழுப்பி வருகிறார்.

இதேபோல் கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணியால் ½ ஏக்கர், 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் பேராபத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த பாதிப்பை தடுத்து நிறுத்தவோ, அதற்கு எதிராக போராடுவதற்கோ மாநில அரசு முன்வரவில்லை. மேலும் பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் பணியாலும் கொங்கு மண்டலமே பாழாகி வருகிறது.

மத்திய அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. காவிரி ஆற்றில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாசன வசதியை பெறாது. மேலும் 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும்.

பிரதமர் நரேந்திரமோடியின் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவொரு சலுகையும் அறிவிக்காததால் பெரும் சிரமத்தில் உள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலமாக கோடிக்கணக்கான சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த நரேந்திரமோடியின் அரசை அகற்ற வேண்டும். விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார். ஆனால் ரூ.15 ஆயிரம் கூட வரவில்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வர உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆம்னி பஸ்கள் வாங்கியதில் ஊழல், கட்டுமான ஏலத்தில் ஊழல், கல்வித்துறையில் ஊழல், துணை வேந்தர்களை நியமிப்பதில் ஊழல் என எதற்கொடுத்தாலும் கமி‌ஷன் வாங்குவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது. இதனால் தொழில் வளமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் சரியான அணுகுமுறை இல்லாததாலும், பேரம் பேசியதாலும் தமிழகத்தில் அமைக்கப்பட இருந்த போர்டு நிறுவனத்தின் விரிவாக்க மையம் குஜராத் மாநிலத்துக்கு சென்றுவிட்டது. இதேபோல் ஹோண்டா தொழிற்சாலை சித்தூருக்கும், தென்கொரியாவின் தொழிற்சாலை ஷிரிசிட்டி நகருக்கும் சென்றுவிட்டது. இதனால் வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் இந்த தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், புதுச்சேரி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.

இந்து கோவில்களில் வழிபடுபவர்களை நாங்கள் மதிக்கிறோம். அதுபோல இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கும் மதிப்பு அளிக்கிறோம். ஆனால் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில இந்துத்வா சக்தி செயல்படுவது வேதனை அளிக்கிறது. அறந்தாங்கியில் பெரியாரின் சிலையை மர்மநபர்கள் சிலர் உடைத்து இருக்கிறார்கள். இது மனவேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் வகையில் நரேந்திரமோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பேராபத்து ஏற்படும். அமைதி இருக்காது. ஜனநாயகத்தை பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கட்சி மலர வேண்டும். அதற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கணேசமூர்த்திக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். இதில் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, முன்னாள் அமைச்சர் முத்தூர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பின்னர் சென்னிமலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார்.


Next Story