டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டம் உள்ளதா? தமிழக அரசு பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டம் உள்ளதா? என்று தமிழக அரசு பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–
தஞ்சை பள்ளியக்ரஹாரம் பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு டாஸ்மாக் கடை செயல்படும்பட்சத்தில் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும். இங்கு டாஸ்மாக் கடை தொடங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த 2016–ம் ஆண்டு 500 கடைகளும், 2017–ம் ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 2004–ம் ஆண்டில் 7 ஆயிரத்து 896 கடைகள் இருந்தன. 2016–ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 6 ஆயிரத்து 715 கடைகள் இருந்தன. ஆனால் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகள் தான் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘ என்று கூறப்பட்டு இருந்தது.
பின்னர் நீதிபதிகள், “டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. அரசின் முடிவுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும்“ என்றனர்.
பின்னர், டாஸ்மாக் கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட புதிய வரிகளை ஏற்படுத்துவது போன்ற திட்டம் எதுவும் தமிழக அரசிடம் உள்ளதா? என்பது பற்றி பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.