உயிர் உரங்களில் வேதிப்பொருள் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
உயிர் உரங்களில் வேதிப்பொருள் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? என்று மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திருச்சி மணப்பாறையை சேர்ந்த அப்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–
நம் நாட்டில் பலர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பயிர்களை பூச்சிகள், நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பெரும்பாலான விவசாயிகள் உயிர் உரம், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி வருகின்றனர். உயிர் உரங்கள் மண்ணுக்கு தேவையான சத்துக்களை சேர்த்து, பயிர்கள் பிற தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யபட்ட மூலப்பொருட்களை கொண்டு உயிர் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தரம் குறைந்ததாக தயாரிக்கிறார்கள். கூடுதல் விலைக்கும் விற்கிறார்கள். தமிழகத்தில் தரமற்ற உயிர் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை சட்டவிரோதமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “உயிர் உரம் என்ற பெயரில் வேதிப்பொருட்களை கலந்து விற்பனை செய்கின்றனர். உயிர் உரங்கள் தயாரிக்கப்படும்போது, அவற்றில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள்“ என்று வாதாடினார்.
அதற்கு, அரசு வக்கீல், “உயிர் உரங்கள் விற்பனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், இதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைக்காக மாநில அளவில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளது“ என்றார்.
விசாரணை முடிவில், தமிழகத்தில் எவ்வளவு உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன? உயிர் உரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் அளவு எவ்வளவு? அதனால் விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உயிர் உரம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். உயிர் உரங்கள் தயாரிப்பை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கொள்கை ரீதியான முடிவுகளையும் எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.