திருப்பூரில் பயங்கரம் பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக்கொலை 5 பேரை பிடித்து போலீஸ் விசாரணை


திருப்பூரில் பயங்கரம் பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக்கொலை 5 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 9:45 PM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீரபாண்டி,

திருவண்ணாமலை அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் கார்த்திக்(வயது 28). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் பல்லடம் அவரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நண்பர் தீனதயாளனுடன்(28) நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு பகுதிக்கு கிரிக்கெட் விளையாட சென்றார்.

அங்கு கிரிக்கெட் விளையாடிய போது வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த எம்.ராஜா என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திக்கும், எம்.ராஜாவும் கடும் வாக்குவாதம் செய்து கொண்டனர். அங்கிருந்த நண்பர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதன்பின்னர் கார்த்திக், தன்னுடன் தகராறு செய்த எம்.ராஜாவை பழி வாங்க திட்டமிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் இருந்த அவர் தனது நண்பர்கள் தீனதயாளன், கண்ணன் ஆகியோருடன் கத்தி, கட்டைகளை எடுத்து கொண்டு வாய்க்கால்மேடு பகுதிக்கு சென்றார்.

அங்கு எம்.ராஜாவின் நண்பரின் தந்தை ஒருவர் இறந்து விட்டார். இதனால் எம்.ராஜா(27) அவரது நண்பர்களான கருப்பு என்ற சரவணன் (29), வெங்கடேஷ் (32) வி.ராஜா (33), மற்றும் முத்துக்குமார் (28) ஆகியோர் அங்கு நின்றிருந்தனர். குடிபோதையில் அங்கு வந்த கார்த்திக், அவரது நண்பர்கள், எம்.ராஜாவின் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கார்த்திக் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார்த்திக்கை தாக்கிய எம்.ராஜா மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருதரப்பினர் மோதலில் கார்த்திக்கை யார் அடித்து கொலை செய்தார்கள்? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இரு தரப்பினர் மோதலில் பனியன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் வீரபாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட கார்த்திக்கு சுபினி என்ற மனைவியும், ஹிருத்திக்ரோ‌ஷன் என்ற மகனும் உள்ளனர்.


Next Story