போலீஸ்காரர் வீட்டில் நூதன திருட்டு : போலி பெண் போலீஸ் கைது


போலீஸ்காரர் வீட்டில் நூதன திருட்டு : போலி பெண் போலீஸ் கைது
x
தினத்தந்தி 10 April 2019 4:53 AM IST (Updated: 10 April 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் வீட்டில் நூதன முறையில் திருடிய போலி பெண் போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பர்நாத், 

தானே மாவட்டம் டோம்பிவிலி கிழக்கு, நந்திவிலி பகுதியை சேர்ந்தவர் விதிஷா. இவரது கணவர் ராஜ்வர்தன். இவர் மும்பை காட்கோபர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். விதிஷாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் கல்யாண் பகுதியை சேர்ந்த பக்தி என்ற சாரிகா ஷிண்டே(வயது33) என்ற பெண் அறிமுகம் ஆனார்.

அவர் போலீசாக இருப்பதாக கூறினார். இதை நம்பி விதிஷாவும் அவருடன் பழகி வந்தார்.

நகை திருட்டு

கடந்த சில நாட்களுக்கு முன் பக்தி, விதிஷாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது, அவருக்கு குளிர்பானம் வாங்க விதிஷா வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் வீட்டில் இருந்த விதிஷாவின் மகளையும், அம்மாவை சீக்கிரமாக அழைத்து வா என கூறி பக்தி வெளியே அனுப்பி வைத்தார். பின்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அவர் வீட்டில் இருந்த தங்கநகைகள், செல்போனை திருடிவிட்டு தப்பிச்சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மான்பாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பக்தியை கைது செய்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், பக்தி பெண் போலீஸ் என கூறி 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story