திருச்சி காப்பகத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளின் நலனுக்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வழக்கு: கலெக்டர் –போலீஸ் கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


திருச்சி காப்பகத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளின் நலனுக்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரி வழக்கு: கலெக்டர் –போலீஸ் கமி‌ஷனருக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காப்பகத்தில் தங்கி இருக்கும் சிறுமிகளின் நலனுக்காக நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய வழக்கில் கலெக்டர், போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

சென்னையை சேர்ந்தவரும், மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகியுமான நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

ஜெர்மனியை சேர்ந்த கிதியோன் ஜேக்கப் என்பவர் திருச்சியில் குழந்தைகள் காப்பகம் நடத்தினார். இந்த காப்பகத்தில் 80–க்கும் மேற்பட்ட சிறுமிகள் அடிப்படை வசதிகள் இன்றி, சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, காப்பகத்தை நிர்வகிக்க திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்தும், சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கிதியோன் ஜேக்கப் தூண்டுதலின்பேரில் சில பெண்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு நியமித்துள்ள குழு மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கண்காணிப்பில் அந்த காப்பகத்தில் சிறுமிகள் தங்கியிருக்கலாம். அவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கிதியோன் ஜேக்கப் மற்றும் அவரது ஆட்கள் சந்திக்கக்கூடாது. மீறி சந்திக்கும் சிறுமிகளை அரசு காப்பகத்துக்கு மாற்ற வேண்டும். தங்கி இருப்பவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க வேண்டும். திருமண வயதை எட்டியதும் பெண்களின் விருப்பத்தின்பேரில் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. காப்பகத்தில் தங்கி உள்ளவர்களை கிதியோன் ஜேக்கப், அவரது ஆட்கள் மிரட்டி வருகின்றனர். எனவே அங்கு தங்கி இருக்கும் சிறுமிகளின் எதிர்காலத்தையும், நலனையும் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மறுவாழ்வு குழு அமைக்கவும், சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும், உயர் கல்வி, வேலைக்காக, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ்களை வழங்கவும் வேண்டும்.

உயர் கல்வி வாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், காப்பக சிறுமிகளை கிதியோன் ஜேக்கப், அவரது ஆட்கள் சந்திப்பதை தடுக்க 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 16–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story