தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பெரம்பலூரில் ஜவாஹிருல்லா பேட்டி


தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் பெரம்பலூரில் ஜவாஹிருல்லா பேட்டி
x
தினத்தந்தி 11 April 2019 11:15 PM GMT (Updated: 11 April 2019 7:49 PM GMT)

தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா பெரம்பலூரில் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சி 549 வாக்குறுதிகளை அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க. நிறைவேற்றாததால், தற்போது தேர்தலில் 75 வாக்குறுதிகளை அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையிலேயே பா.ஜ.க. தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது.

ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களும், நடைமுறைக்கு சாத்தியமாகக்கூடிய திட்டங்களும் இடம்பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெறும்.

பெரம்பலூர் எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் தொகுதியில் உள்ள குடிநீர் தட்டுப்பாட்டிற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசுவக்குடி அணையின் பயன்பாடு மக்களுக்கு முழுவதும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக அலை வீசி வருகிறது. டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அந்த கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன், தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

இதையடுத்து இரவு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே பாலக்கரையில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து நடத்தப்பட்ட பிரசார பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். 

Next Story