காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - வைகோ குற்றச்சாட்டு


காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் - வைகோ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 April 2019 5:09 AM IST (Updated: 13 April 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் கொச்சைப்படுத்துகிறார் என்று வைகோ குற்றம் சாட்டினார்.

இடிகரை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.ஆர் நடராஜன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

காஷ்மீரில் நடந்த புலவாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துகிறார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் கோவையில் மட்டும் சுமார் 50 ஆயிரம் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவடைந்தன. இதனால் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கார்ப்பரேட் கம்பெனிக்காகவே மோடி வேலை செய்கிறார். இந்தியாவில் 23 பேர் மட்டும் சுமார் 900 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர். மேகதாது, முல்லைப் பெரியார் அணை கட்ட அனுமதி வழங்கியது, தென் மவட்டங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்து வருகிறது. இதை அ.தி.மு.க. அரசு தட்டிக்கேட்காது, காரணம் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்- அமைச்சர் ஆகியோர் ஊழலில் சிக்கித்தவிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி 13 பேரை படுகொலை செய்துள்ளார் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இந்துக்கள் அனைவரும் செல்கின்றனர். அதேபோல் கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினர் அனைவரும் அவரவர் ஆலயம், தர்காவிற்கு செல்ல அனுமதி வேண்டும். இதற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதனால் ஆ.ராசா மற்றும் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் சி.ஆர்.ராமசந்திரன், அறிவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாலமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் சின்னராஜ், கோவிந்தராஜ், ம.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மோகன்குமார், ஆறுமுகம், குடைமுத்துசாமி, மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து வைகோ காரமடையில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். 

Next Story