ஈரோட்டில் போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
ஈரோடு அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு சத்தி ரோடு எல்லை மாரியம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டு செந்தில்குமார் நேற்று போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் நடந்து வந்த 2 வாலிபர்களை அவர் தடுத்து நிறுத்தி எங்கே போகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் செந்தில்குமார் அவரை அடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் சேர்ந்து போலீஸ்காரரை தாக்கியுள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவருடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் தட்டனேரி பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23), என்பதும், தப்பி ஓடியவரும் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் பெருந்துறையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர். தப்பி ஓடிய வினோத்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.