கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி உறுதி மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - சித்தராமையா பேட்டி


கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி உறுதி மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 3:42 AM IST (Updated: 16 April 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் என்றும், கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்றும் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். பா.ஜனதா 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரு கட்சிகளுமே 150 தொகுதிகளை தாண்டும். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது.

ஆனால் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. தேர்தலுக்கு பிறகு மதசார்பற்ற கொள்கை கொண்ட அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரளும்.

நாட்டில் மோடி அலை இல்லை. இது தான் உண்மை நிலை. மதவாதம், பிரித்தாளும் கொள்கை கொண்ட பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்து வருகிறது. இது, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஓரணியில் திரளும்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதால், மதசார்பற்ற கட்சிகளின் வாக்கு வங்கி ஒன்று கூடியுள்ளது. மாநிலங்களில் தனித்தனியாக போட்டியிடும் மதசார்பற்ற கட்சிகள், தேர்தலுக்கு பிறகு ஓரணியில் சேரும்.

நாங்கள் மதவாத கட்சிக்கு எதிராக ேபாராடுகிறோம். எங்கள் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது பிரசாரம் நன்றாகவே போய் கொண்டிருக்கிறது. நானும், ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடா இருவரும் கூட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.

மைசூரு தொகுதியில் மந்திரி ஜி.டி.தேவேகவுடாவுடன் சேர்ந்து நான் பிரசாரம் செய்துள்ளேன். இரு கட்சிகளின் தொண்டர்களும் சேர்ந்து தேர்தல் பணியாற்றும்படி நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வாக்கு வங்கிகள், ஒன்று சேர்ந்தாலே கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

பிரதமர் பதவியில் மோடி 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரது தோல்விகளை குறிப்பிடுவதை தவிர வேறு யாரை குறை சொல்லி பேசுவது?. நாங்கள் மோடியை தாக்கி பேசுகிறோம் என்றால், அது ஆர்.எஸ்.எஸ்.-ஐ தாக்கி பேசுகிறோம் என்று அர்த்தம். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சின்னம்.

பா.ஜனதா மக்களின் பிரச்சினைகளை சொல்லி பிரசாரம் செய்யவில்லை. துல்லிய தாக்குதலை குறிப்பிட்டே பிரசாரம் செய்கிறார்கள். மோடி தனது சாதனைகள் என்ன என்பதை பிரசாரத்தில் கூறவில்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 12 முறை துல்லிய தாக்குதல் நடைபெற்றது. 1948-49-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போர் நடந்தது. அப்போது மோடி பிறந்திருக்கக்கூட மாட்டார். 1977-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் போர் நடந்தது.

இந்திரா காந்தி அப்போது பிரதமராக இருந்தார். பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் தனியாக பிரித்து வழங்கப்பட்டது. அப்போது மோடி எங்கே இருந்தார்?. ராணுவத்தில் வீரராக இருந்தாரா?. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற துல்லிய தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது போன்ற பழைய உணர்வுபூர்வமான விஷயங்களையே பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்த பிரச்சினைகள் 1982-ம் ஆண்டில் இருந்து இருக்கிறது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story