இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு


இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2019 4:45 AM IST (Updated: 17 April 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜனவரி 12–ந்தேதி துரைப்பாண்டி, ஜாம்டேனியல் என்ற 2 மாணவர்கள் உள்பட 8 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறை வைத்துள்ளனர். இதுவரை இவர்களுக்கு 7 முறை காவல்நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு மேல் ஆகியும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படாதது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மாணவர்களை விடுவிக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்க போவதாக அவர்களது குடும்பத்தினர் அறிவித்து இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்தனர்.

நேற்று இதுதொடர்பான விவரங்களை கேட்டறிவதற்காக மீன்துறை துணை இயக்குனர், இந்த மீனவ குடும்பங்களை சந்திக்க வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலை முதல் வீட்டிலேயே காத்திருந்த அவர்களுக்கு மாலை வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:–

கடந்த 90 நாட்களுக்கு மேல் மீனவர்களை சிறை வைத்துள்ளனர். இவர்கள் பிடிபட்டதற்கு பின்பு கைதான மீனவர்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏன் இவர்களை விடுவிக்கவில்லை என தெரியவில்லை. கடந்த முறை நீதிமன்றத்துக்கு வந்தபோது மாணவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, மிகவும் கஷ்டப்படுவதாகவும், சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர்.

காவல் நீட்டிப்பில் உள்ள அவர்கள் வருகிற 22–ந்தேதி மீண்டும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் மாணவர்கள் 2 பேரையும் விடுதலை செய்யாவிட்டால் மீனவ குடும்பங்களுடன் சேர்ந்து தங்கச்சிமடத்திலோ அல்லது பாம்பன் ரோடு பாலத்திலோ சாலை மறியலில் ஈடுபடுவோம். எனவே உடனடியாக இவர்களை விடுதலை செய்ய மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது மாணவர் துரைப்பாண்டியனின் தாயார் பானுமதி, ஜாம்டேனியல் தாயார் டெய்சி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story