வானூர் தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி: வெடிகுண்டுகள் வீசிய ஆசாமிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்


வானூர் தி.மு.க. பிரமுகரை கொல்ல சதி: வெடிகுண்டுகள் வீசிய ஆசாமிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 10:44 PM GMT)

தி.மு.க. பிரமுகரை கொல்ல வெடிகுண்டுகள் வீசிய மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). தி.மு.க. பிரமுகர். இவர் கடந்த 14-ந் தேதி இரவு கோரிமேடு வழியாக பூத்துறை சாலையில் காசிப்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்தது. நள்ளிரவு நேரத்தில் நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்ததால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த உதயகுமார், செல்போன் மூலம் காசிபாளையத்தை சேர்ந்த தனது உறவினர் அருண்குமார் என்கிற மணிபாலனுக்கு (29) தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அருண்குமார், தனது உறவினர்களான ராமமூர்த்தி, பன்னீர்செல்வம், சிவக்குமார் மற்றும் சிலரை திரட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் காசிப்பாளையம் சாலையில் எதிரே வந்தார். அப்போது உதயகுமாரை பின்தொடர்ந்து வந்தவர்களை அருண்குமார் தரப்பினர் வழிமறித்து தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம ஆசாமிகள், அவர்கள் வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து அருண்குமார் தரப்பினரை நோக்கி வீசிவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்றனர். குண்டு வீச்சில் காயமடைந்த அருண்குமார், ராமமூர்த்தி (27) இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உதயகுமாரை கொலை செய்யும் நோக்கில் மர்ம ஆசாமிகள் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமார் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.

Next Story