வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ


வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ
x
தினத்தந்தி 18 April 2019 3:45 AM IST (Updated: 17 April 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

தேனி,

தேனியை சேர்ந்தவர்கள் திருவரங்கப்பெருமாள், ராமானுஜம். இவர்களுக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் தேனி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான குடோன், அதே பகுதியில் காட்டுபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ளது.

இந்த குடோனில், கட்டில், மெத்தை, ஷோபா உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த குடோன் தரைத்தளம் உள்பட 3 தளங்களை கொண்ட கட்டிடம் ஆகும். இதேபோல் மொட்டை மாடியிலும், தகர மேற்கூரை அமைக்கப்பட்ட அறையும் உள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த குடோனில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. குடோனில் உள்ள ஜன்னல்கள் வழியே புகை வெளியேறியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் குடோனில் இருந்து அலறியடித்து வெளியேறினர். சிறிது நேரத்தில் தீ மள, மளவென பரவியது. இதுகுறித்து தேனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு, தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதல் தளத்தில் எரிந்து கொண்டு இருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், 2-வது தளம் மற்றும் மொட்டை மாடியில் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த பகுதியிலும் தீப்பற்றி எரிந்தது. ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால், போதிய காற்றோட்டம் இன்றி தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டது. அந்த கிரேன் மூலம் மேற்கூரையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. சுமார் 2½ மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கு இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டார். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story