ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன-மின்சாரம் துண்டிப்பு ஓட்டுப்பதிவு பாதிப்பு


ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன-மின்சாரம் துண்டிப்பு ஓட்டுப்பதிவு பாதிப்பு
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் வயர் அறுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஓட்டுப் பதிவும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் 100 டிகிரியை தாண்டி வெளுத்து வாங்குகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று திருச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடியும், முக்காடு போட்டுக்கொண்டும் வாக்காளர்கள் சென்று வாக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 93 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு ஆரம்பித்த சில மணி நேரங்களில் மின்னணு எந்திரங்களில் பழுதுகள் ஏற்பட்டாலும் உடனே அவை சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில் மாலை 4.30 மணி அளவில் ஸ்ரீரங்கத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றால், தெற்கு சித்திரை வீதியில் இருந்த 2 வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.

இதேபோல் பலத்த காற்றால் ராஜகோபுரம் எதிரே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனே அங்கிருந்தவர்கள் பொதுமக்கள் யாரும் மின்கம்பியை மிதிக்காதவாறு ‘பேரிகார்டு’ மற்றும் பிளக்ஸ் போர்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. பின்னர் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை 4.30 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணி வரை வரவில்லை.

ஆனாலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் பேட்டரி மூலம் சார்ஜ் ஏற்றப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படாமல் தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளையில் வாக்குச்சாவடிகளில் வெளிச்சத்துக்காக மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. சூறாவளி காற்று மற்றும் மழை காரணமாக ஸ்ரீரங்கம் பகுதியில் மாலையில் வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லவில்லை. இதனால், மாலையில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாலை 6 மணிக்கு முறைப்படி வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story