வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அதிகரிப்பு கலெக்டர் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அதிகரிப்பு கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 5:19 PM GMT)

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் கடந்த 18–ந் தேதி விறுவிறுப்பாக நடந்தது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 69.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெட்டியில் வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறையில் வைத்து அதிகாரிகள் பூட்டினர். அதன்பிறகு அந்த அறைகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே சீல் வைத்தார். பின்னர் அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பாதுகாப்பு படையினரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதோடு கல்லூரி வளாகத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கோணம் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினரையும் சேர்த்து சுமார் 300 பேர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷிப்டு அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி நடக்கிறது.

அதோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு செல்லும் வழியில் மெட்டல் டிடக்டரும் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு அதிகாரியாக இருந்தாலும் சரி, கலெக்டர் பிரசாந்த் வடநேரேவின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கட்சி பிரமுகர்கள் எனில் கலெக்டரிடம் முன்கூட்டியே தெரிவித்து பாஸ் வாங்கிய பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த பாதுகாப்பு பணிகளை கலெக்டர் பிரசாந்த வடநேரே மற்றும் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டனர்.

Next Story