சிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு
சிவகாசி பகுதியில் நடைபெற்ற 2 நகை வழிப்பறி சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி சர்க்கரை வாவா தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சீதாலட்சுமி (வயது 56). இவர் கடந்த 14–ந்தேதி தனது வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மூதாட்டி சீதாலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சீதாலட்சுமி இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல் சிவகாசி தில்லைநகரை சேர்ந்த சுந்தர்ராஜ் மனைவி ஜெயக்கொடி (40) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஜக்கம்மாள் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கநகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயக்கொடி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சிவகாசி டவுன் போலீசார் பாதிக்கப்பட்ட 2 பெண்களிடமும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வாலிபர்களின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் அது சம்பந்தமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சங்கீதா பூபாலன், சப்–இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சிவகாசி–விளாம்பட்டி ரோட்டில் உள்ள கல்மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகசாமியின் மகன் முருகன் (22) என்றும், இவர் சீதாலட்சுமி, ஜெயக்கொடி ஆகியோரிடம் தங்கநகையை பறித்து சென்றது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த மாசானைதேவேந்திரன் (32), சின்னப்பாண்டி (29) ஆகியோரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.