டாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்கள் கொள்ளை கண்காணிப்பு கேமராவையும் எடுத்து சென்றனர்


டாஸ்மாக் கடையில் பணம், மது பாட்டில்கள் கொள்ளை கண்காணிப்பு கேமராவையும் எடுத்து சென்றனர்
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-22T22:07:59+05:30)

திங்கள்சந்தை அருகே டாஸ்மாக் கடையில் ‌ஷட்டரை உடைத்து பணம், மது பாட்டில்கள், கண்காணிப்பு கேமராவை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே ஆழ்வார்கோவில், கீழமணியன்குழியில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் கடையை திறக்க சென்ற போது, ‌ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கடையில் இருந்த மது பாட்டில்கள், மேஜையில் இருந்த ரூ. 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும், கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவையும் காணவில்லை.

இரவில் மர்ம நபர்கள் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணம், மது பாட்டில்களை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து தங்களை அடையாளம் தெரியாமல் இருக்க கண்காணிப்பு கேமராவையும் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இந்த கொள்ளை குறித்து, டாஸ்மாக்  சூப்பர்வைசர் மைக்கேல் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள், ரூ.9 ஆயிரம் ரொக்கம், கண்காணிப்பு கேமரா போன்றவை கொள்ளை போனதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.    

கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை கொள்ளையர்கள் எடுத்து சென்றதால் அந்த பகுதியில் வேறு எங்காவது கண்காணிப்பு கேமரா உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story