திருப்பூரில் பயங்கரம்: ஓட்டல் ஊழியர் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை போலீசார் விசாரணை
திருப்பூரில் ஓட்டல் ஊழியர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நல்லூர்,
திருப்பூர் செரங்காடு எம்.ஜி.பி. தியேட்டர் பின்புறம் உள்ள கடுகுகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவருடைய மனைவி கண்ணம்மாள் (45). இவர்களுக்கு செல்வக்கணபதி (19) என்ற மகனும், உமாமகேஸ்வரி (15) என்ற மகளும் உள்ளனர்.
கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து நாகராஜ் தனியாக சென்று விட்டார். அதன்பின்னர் கே.செட்டிபாளையம் பகுதியில் தனியாக தங்கி தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் பகுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் நடத்தி வரும் மதுரை ஸ்ரீபாண்டி முனியாண்டி விலாஸ் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடன் தூத்துக்குடி மாவட்டம் புலியான்குளம் பகுதியை சேர்ந்த தமிழண்ணா (40) என்பவரும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த ஓட்டல் தினமும் காலையில் 6 மணிக்கு திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். ஆனால் நேற்று காலை 10 மணியாகியும் ஓட்டல் திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்து கடைக்காரர் ஒருவர் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது ஓட்டலின் தகரத்தால் ஆன கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரத்த வெள்ளத்தில் நாகராஜ் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அருகே உருட்டுக்கட்டை கிடந்தது. அந்த உருட்டுக்கட்டை ரத்தக்கறையாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து கடைக்காரர் இது குறித்து திருப்பூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் நவீன் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன், சப்–இன்ஸ்பெக்டர் சவுந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் கடந்த 21–ந்தேதி காலையில் ஓட்டலை திறந்து வியாபாரம் செய்ய சரவணக்குமார் முடிவு செய்துள்ளார். அப்போது அவருடைய மனைவி கடை நடத்த வேண்டாம் என்று கூறிவிட்டு தேனிக்கு சென்று உள்ளார். அதன்பின்னர் சரவணக்குமார் காலை உணவு வகைகளை தயார் செய்து வைத்து விட்டு, வியாபாரத்தை கவனித்துக்கொள்ளுமாறு நாகராஜ் மற்றும் தமிழண்ணாவிடம் கூறி விட்டு, அவரும் ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்று இரவு 9.30 மணிக்கு நாகராஜிக்கும், தமிழண்ணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் நடந்த பிறகு தமிழண்ணாவை காணவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை பிடித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். இதையடுத்து தலைமறைவாக இருக்கும் தமிழண்ணாவை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூரில் ஓட்டல் தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.