குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 April 2019 11:00 PM GMT (Updated: 22 April 2019 8:42 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் மணவாடி கஸ்பா கிராமத்தில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு, ஊர் பொதுக்கிணறு மற்றும் 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைத்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பழுதாகிவிட்டதாலும், ஊர் பொதுக்கிணறு தூர்ந்து போய் சேறும், சகதியுமாக உள்ளதாலும் தண்ணீரை பெற முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான அந்த கிராம மக்கள், காலிக்குடங்களுடன் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

மனு கொடுத்து சென்றனர்

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் கலெக்டரை சந்திக்க இயலாது. மாறாக அங்குள்ள புகார் பெட்டியிலேயே மக்கள் மனுக்களை போட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுத்து, குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும் என முறையிட்டனர். அப்போது, காவிரி குடிநீர் குறைந்த அளவு வருவதால், அதனை வைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. மேலும் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று கிணறுகளில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே கிணற்றினை தூர்வாருதல், ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களை சரி செய்தல் என்பன உள்ளிட்ட நீர்மேலாண்மை பணிகளை மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை அனுப்பி வைத்தார். 

Next Story