காந்திய வழியில் நடப்போர், தொண்டு நிறுவனத்தினர் அமைதிக்கான பரிசு பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


காந்திய வழியில் நடப்போர், தொண்டு நிறுவனத்தினர் அமைதிக்கான பரிசு பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 April 2019 10:15 PM (Updated: 22 April 2019 8:45 PM)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் காந்திய வழியில் நடப்பவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் அமைதிக்கான பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி சாந்தி தெரிவித்துள்ளார்.

கரூர்,

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நமது நாட்டிற்கு பெருமை தேடித்தரும் வகையில் காந்திய வழியினை பின்பற்றி தொண்டு புரிந்து வரும் தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு காந்தி அமைதி பரிசு வழங்கி வருகிறது. அதன்படி இந்திய அரசின் சார்பில் 2019-ம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காந்தி அமைதிப்பரிசு வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவுகூரும் வகையிலும் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த கவுரவ விருது ரூ.1 கோடியும், வாழ்த்து பதக்கமும் உள்ளடங்கியதாகும். ஒவ்வொரு வருடமும் பிரதம மந்திரியை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு மூலம் விருது பொறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதிகள்

இந்த விருது தனிநபர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு அகிம்சை முறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், காந்திய வழியில் மனித துயரங்களை அகற்றுவதற்கும் முக்கியமாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு சமூக நீதி மற்றும் இணக்கமான நிலையை ஏற்படுத்துபவர்களுக்கும்,தேசிய, இனம்,மொழி, சாதி, பாலினம், போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு வழங்கப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் எழுதி பிரசுக்கப்பட்டுள்ள நூல் படைப்பாளர்கள் இவ்விருதுகளை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். சாதாரணமாக போட்டியில் கலந்து கொள்வதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் படைப்பு புத்தகங்கள் பரிசுக்காக போட்டியிருக்க இருக்க வேண்டும். பழைய நூல்களும் பரிசீலித்து ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவற்றின் முக்கியத்துவம் சமீப காலங்களில் உணரப்பட்டிருக்க வேண்டும்.

வருகிற 25-ந்தேதிக்குள்...

எனவே கரூர் மாவட்டத்தில் காந்தி அமைதி பரிசு பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது கூடுதல் மற்றும் சிறப்பு தகுதிகளை குறிப்பிடுவதற்கு ஏதுவாக கூடுதல் தாள்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த விருதிற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 25-ந்தேதிக்குள் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Next Story