வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
திருப்பூரில் வாக்காளர்களுக்கு பணம், மது கொடுத்த அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் நேற்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வார்டு எண் 33–ல் பாகம் எண் 168 முதல் 174 வரை 7 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வைப்பதற்காக, திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் பாரதிநகரில் வசித்து வரும் கருப்புசாமி மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் கடந்த 18–ந் தேதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். கருப்புசாமி 33–வது வார்டு அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார். மேலும் வாக்களித்து விட்டு வந்த ஆண்களுக்கு மதுபான பாட்டில்களையும் வழங்கியுள்ளனர்.
இதைப்பார்த்த பொதுமக்களும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினரும் வாக்குச்சாவடிக்கு அருகில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் கருப்புசாமியிடம் பணம், மது வாங்குவதற்கு அதிகமானோர் திரண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கருப்புசாமி ஓடியபோது கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த ஆவணங்களும் கீழே விழுந்தன. அவற்றை பொதுமக்கள் எடுத்து வாக்குச்சாவடியில் முகவர்களாக இருந்த ரத்தினசாமி, மணி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.
அந்த ஆவணங்களில் அ.தி.மு.க. வேட்பாளருக்காக, கருப்புசாமி மூலம் யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கான விவரங்கள், பூத் எண், வரிசை எண், வாக்காளர்களின் பெயர், பூத் சிலிப்புகள் இருந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பூத் சிலிப்பை கொடுத்த கருப்புசாமி, தன்னை தாக்கியதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது பொய் புகாரை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ளார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி கருப்புசாமி மற்றும் அவருடன் இருந்த அ.தி.மு.க.வினர் மீதும், வேட்பாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமாரிடமும் மனு கொடுத்துள்ளனர். அதில் கருப்புசாமி தன்னை தாக்கியதாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ரத்தினசாமி, பொன்னுசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய விசாரணை நடத்தி கருப்புசாமி அளித்த பொய் புகாரை ரத்து செய்து, வாக்காளர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.