அரியாங்குப்பம் அருகே பயங்கரம்; தச்சுத் தொழிலாளி வெட்டிக் கொலை


அரியாங்குப்பம் அருகே பயங்கரம்; தச்சுத் தொழிலாளி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 25 April 2019 5:00 AM IST (Updated: 25 April 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம் அருகே தச்சத்தொழிலாளி வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் சண்முகம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). தச்சு தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு புவியரசன் என்ற மகனும், பவளசெம்மொழி என்ற மகளும் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் நோணாங்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சூர்யா சென்று இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நாகராஜ் அங்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்த்தார். அங்கிருந்து அரியாங்குப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

நோணாங்குப்பம் தொடக்கப்பள்ளி முன்பு உள்ள வளைவில் திரும்பியபோது, 10 பேர் கொண்ட கும்பல் திடீரென்று நாகராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அந்த ஆசாமிகள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்த்தனர். அடையாளம் காண முடியாத அளவுக்கு நாகராஜின் முகத்தை அந்த கும்பல் சிதைத்தது.

பலத்த வெட்டுக்காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். இதை உறுதி செய்த பிறகே அந்த கும்பல் அங்கிருந்து சென்றது.

மதியம் சுமார் 1.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தின் போது அங்கு ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள், நாகராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது பற்றி தெரிந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து நாகராஜின்உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதன்பின் நாகராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நோணாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான இரிசம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சந்திரன் என்பவருக்கும், நாகராஜிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்திரன் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலைக்கு பழிக்கு பழியாக நாகராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டி மற்றும் வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Next Story