திருப்புவனம் அருகே கொத்தனார் கொலை வழக்கில் வாலிபர் கோர்ட்டில் சரண்
திருப்புவனம் அருகே நடந்த கொத்தனார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது செங்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 33). இவர் மதுரையில் குடும்பத்துடன் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தலையொட்டி தனது கிராமத்துக்கு வந்து ஓட்டு போட்டு விட்டு அன்று இரவு மோட்டார் சைக்கிளில் தனது 5 வயது மகன் ராஜவேலுடன் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். திருப்புவனம் அருகே செங்குளம்–மதுரை ரோட்டில் உள்ள கருங்காலங்குடி கண்மாய் கழுங்கு பாலத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் சிறுவன் ராஜவேலுவின் கண் முன்னே ஆறுமுகத்தை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து இந்த கொலை குறித்து திருப்புவனம் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்புவனம் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (வயது 31) மதுரை ஜே.எம்.4 கோர்ட்டில் சரணடைந்தார்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 3 பேரை திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆறுமுகம் தனியார் வங்கி கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.