கடியப்பட்டணத்தில் கடல் சீற்றம்: பாதிக்கப்பட்ட இடங்களை பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


கடியப்பட்டணத்தில் கடல் சீற்றம்: பாதிக்கப்பட்ட இடங்களை பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

கடியப்பட்டணம், மண்டைக்காடு புதூர் பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

குளச்சல்,

குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடியப்பட்டணம் பகுதியில் ஏற்பட்ட சீற்றத்தால் அந்தோணியார் தெருவில் தடுப்பு சுவரையும் தாண்டி கடல் நீர் புகுந்தது. இதில் சிலுவைதாசன் என்பவரின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. மேலும், அப்பகுதியில் 300 வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க வீடுகளை சுற்றி மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கடியப்பட்டணம், மண்டைக்காடு புதூர் பகுதிகளை நேற்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். இதில் பங்குத்தந்தையர்கள் பபியான்ஸ், சாம் மேத்யூ, பங்கு பேரவை நிர்வாகிகள், காங்கிரஸ் வட்டார தலைவர் கிளாஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அலைதடுப்பு சுவர்

பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

நேற்று முன்தினம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடியப்பட்டணம் அந்தோணியார் தெரு, மண்டைக்காடு புதூர் ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடல் சீற்றத்தின் போது இந்த பகுதியில் உள்ள வீடுகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகிறது. இந்த பகுதியில் நிரந்தர அலை தடுப்பு சுவர் அமைக்க 3 முறை சட்டசபையில் பேசியுள்ளேன். மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளேன். தொடர் சீற்றத்தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது மீனவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, கடியப்பட்டணம் அந்தோணியார் தெரு, மண்டைக்காடு புதூர் ஆகிய பகுதிகளில் நிரந்த பாதுகாப்புக்கு அங்கு அலை தடுப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுநாள்வரை அலை தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story