இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் எதிரொலி: ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் எதிரொலியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு,
இலங்கையில் தொடர்ந்து தீவிரவாதிகள் மனித வெடி குண்டுகளை வெடிக்கச்செய்து உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுவரை 300–க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த சம்பவங்கள் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்திலும் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் பல்வேறு ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டத்திலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாநகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து வந்தனர். அப்போது அவர்கள் சந்தேகப்படும்படி யாரேனும் நின்று கொண்டு இருந்தால் அவர்களை பிடித்து விசாரணையும் நடத்தினார்கள்.
குறிப்பாக ஈரோடு பஸ் நிலையம், வழிபாட்டு தலங்கள், காளை மாட்டு சிலை பகுதி, பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோட்டிற்கு வரும் வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி, பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, ஊஞ்சலூர், மொடக்குறிச்சி, தாளவாடி, சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து வந்தனர். ஈரோடு ரெயில் நிலையத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.
ரெயில்வே போலீசார் நேற்று ஈரோடு வழியாக வந்த அனைத்து ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டிற்கு வந்தவர்களையும் போலீசார் ரெயில்வே நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 17 சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸ் துறை சார்பில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.
ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் –அண்ணா நினைவகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.