கீழ்வேளூர் அருகே தேவநதி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை


கீழ்வேளூர் அருகே தேவநதி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 April 2019 4:15 AM IST (Updated: 28 April 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே தேவநதி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூர் பகுதியில் தேவநதி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி என்ற பகுதியில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. கீழ்வேளூரில் இருந்து ஆணைமங்கலம், கோகூர், வடகரை, வங்காரமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களும், 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், லாரிகள், ஆட்டோக்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இந்த வழியாக தான் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கீழ்வேளூர் பகுதிக்கு வந்து பஸ் ஏறி செல்ல வேண்டும்.

புகழ் பெற்ற கோகூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடைபெறும் போது ஆயிரக்கணக்கானோர் பல்வேறு வாகனங்களில் வருவார்கள். அப்போது இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் உள்ள தேவநதி ஆற்றுப்பாலத்தின் ஒரு பகுதியில் எவ்வித தடுப்பு சுவரும் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த ஆபத்தான பாலத்தின் வழியாக தான் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலம் சாலையின் வளைவில் இருப்பதால் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

நடவடிக்கை

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தேவையற்ற பல இடங்களில் இரும்பு குழாய் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு தேவநதி ஆற்றுப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story