தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் வதந்தி எதிரொலி: ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் வதந்தி எதிரொலி: ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 28 April 2019 4:30 AM IST (Updated: 28 April 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக வந்த வதந்தி எதிரொலி காரணமாக ஓசூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

தமிழகத்தில் ரெயில்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வதந்தி கிளம்பியது. இந்த வதந்தியை பரப்பியதாக சுந்தரமூர்த்தி (வயது 65) என்பவரை, பெங்களூரு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது.

வெடிகுண்டு வதந்தியை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு முக்கிய இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

போலீசார் சோதனை

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று காலை ரெயில் நிலையத்திற்கு வந்து சென்ற ரெயில்களிலும், பயணிகள் இருக்கைகள் மற்றும் அவர்களது பொருட்களையும் போலீசார் சோதனையிட்டனர். மேலும் ரெயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.

இதேபோல், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி, பாகலூர் சாலையில் கக்கனூர் செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக ஓசூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story