திருப்பூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நவீன வாகனம்


திருப்பூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நவீன வாகனம்
x
தினத்தந்தி 1 May 2019 5:19 AM IST (Updated: 1 May 2019 5:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நவீன வாகன ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்ய நவீன வாகனம் வாங்குவதற்கான ஏற்பாட்டை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதையொட்டி மாநகராட்சி பகுதியில் அந்த வாகனத்தை கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பூமிக்கு அடியில் குழாய் அமைத்து கழிவுநீரை கொண்டு செல்லும் இந்த திட்டத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் பாயாமல் தடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் உள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீரை எடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பெரியாயிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ‘ஆள் இறங்கும் குழி’ என்றழைக்கப்படும் பகுதி வழியாக ரோட்டில் பாய்ந்து விடுகிறது. அடைப்பை நீக்குவதற்கு வசதியாக ரோடு மற்றும் வீதிகளில் இரும்பு மூடி போட்டு ‘ஆள் இறங்கும்குழி ’ அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குழாய் மூலமாக கழிவுநீரை உறிஞ்சு எடுத்து அடைப்பு சரி செய்யப்படுகிறது. இந்த முறையில் சிறிய கல், மண் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில் பாதாள சாக்கடை குழாயில் தேங்கும் கல் மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக ஜெர்மனி நாட்டு தொழில்நுட்பத்துடன் நவீன வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம், இந்த வாகனத்தின் தொழில்நுட்பம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறியுள்ளனர். சோதனை முறையில் அந்த வாகனத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

திருப்பூர் காலேஜ் ரோடு, குறிஞ்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் இருந்து மண், சிறிய கற்களை உறிஞ்சு எடுத்து அடைப்பை நீக்கும் பணி நவீன வாகனத்தின் உதவியுடன் நேற்று சோதனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதார பிரிவு தொழில்நுட்ப உதவியாளர் சுஜாத் அலி, உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த வாகனத்தின் சிறப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டால் தற்போது உள்ள வாகனத்தின் மூலம் கழிவுநீரை உறிஞ்சு எடுக்க முடியும். மண் மற்றும் சிறிய கற்களை அள்ள முடியாது. மேலும் தண்ணீர் லாரிகளின் தண்ணீர் கொண்டு வந்து குழாய்க்குள் ஊற்றி அடைப்பை நீக்க வேண்டும். ஆனால் இந்த நவீன வாகனத்தின் மூலம் பாதாள சாக்கடை கழிவுநீரை உறிஞ்சு 15 நிமிடத்தில் சுத்திகரிப்பு செய்து 9 ஆயிரம் லிட்டர் நீரை பெற முடியும். இந்த நீரை பயன்படுத்தி பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பை எடுக்க பயன்படுத்தலாம். மேலும் மண் மற்றும் சிறிய கற்களையும் அள்ள முடியும். இந்த வாகனத்தை வாங்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை செய்துள்ளது. சிறப்பு நிதி பெற்று வாகனம் வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றனர்.


Next Story