மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் + "||" + Actor Vijay in the shooting stage Fire accident

நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
சென்னையில், நடிகர் விஜய் படப்பிடிப்பு அரங்கில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆலந்தூர்,

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தை டைரக்டர் அட்லி டைரக்டு செய்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து நடந்து வருகிறது.


இதற்காக தேவாலயம், ஆஸ்பத்திரி, மருந்தகங்கள், பள்ளிக்கூடம் என பல படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் படப்பிடிப்புக்காக புதிதாக அரங்கு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அதன் அருகில் காய்ந்த மரக்கழிவுகள் மற்றும் இலைகள் கிடந்தன. இரும்பு கம்பிகளை ஊழியர்கள் வெல்டிங் வைக்கும்போது அதில் இருந்து பறந்த தீப்பொறி அருகில் உள்ள மற்ற அரங்குகளுக்கு பரவியதால் அவை தீப்பிடித்து எரிந்தன. அனைத்தும் மரப்பலகைகள், கம்புகள் என்பதால் படப்பிடிப்பு அரங்குகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிண்டி, தாம்பரம் சானடோரியம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், படப்பிடிப்பு அரங்குகளில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானதால் சென்னை குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் 25-க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர். இங்கு அதிகமான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் அவசர கால வசதிகள், தண்ணீர் வசதிகள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

நேற்று படப்பிடிப்பு நடைபெறாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரங்குகள், பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுபற்றி மீனம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி சென்னை செம்பரம்பாக்கத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் 100 அடி உயரத்தில் இருந்து மின்விளக்கு விழுந்து எலக்ட்ரீசியன் ஒருவர் படுகாயம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.