அருப்புக்கோட்டை ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றாத கலெக்டர், அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு; அடுத்த மாதம் 3–ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
அருப்புக்கோட்டையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 3–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஜனகராஜன் என்பவர் நிர்வாக அறங்காவலராக உள்ள அறக்கட்டளையின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இந்த அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அருப்புக்கோட்டை வன்னியன் ஊருணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரியும், பட்டாவை ரத்து செய்யக் கோரியும், ஊருணியின் மற்றொரு புறத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஊருணியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 26.9.2018 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வன்னியன் ஊருணியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உரிய நடைமுறைப்படி இந்த கோர்ட்டு உத்தரவு கிடைத்த 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும், ஊருணியின் மறுபுறத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுத்து ஊருணியை நீர்நிலையாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஊருணி அறங்காவலர் ஜனகராஜன் குறைதீர்க்கும் நாளின் போது கடந்த 20.10.2018 அன்று கோரிக்கை மனு கொடுத்தார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஜனகராஜன், ஐகோர்டு உத்தரவிட்டப்படி வன்னியன் ஊருணியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாததால் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. செல்லப்பா, அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் புவனேஷ்வரன் என்கிற அண்ணாமலை ஆகிய 3 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 3–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.