மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்ததற்கு பொறுப்பேற்று கவர்னர் கிரண்பெடி ராஜினாமா செய்ய வேண்டும் - நாராயணசாமி ஆவேசம்


மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்ததற்கு பொறுப்பேற்று கவர்னர் கிரண்பெடி ராஜினாமா செய்ய வேண்டும் - நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 6 May 2019 5:03 AM IST (Updated: 6 May 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்ததற்கு பொறுப்பேற்று கவர்னர் கிரண்பெடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் கிரண்பெடி தலையிடுவது, அதிகாரிகளை தன்னிச்சையாக அழைத்து கூட்டங்கள் நடத்துவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் சட்டம் ஆகியவற்றின்படி அதிகாரமில்லை.

அவ்வாறு கவர்னர் செயல்படுவது விதிமுறைகளை மீறிய செயல் என்றும் முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரமில்லை, அவர் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் முடிவின்படி செயல்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே இனிமேல் தலைமை செயலர், அரசுத்துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவின்படிதான் செயல்பட வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் இந்த கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அங்கிருந்து வரும் உத்தரவின்படி செயல்பட வேண்டும்.

கொள்கை முடிவுகளைத்தான் கவர்னர் எடுக்க வேண்டும். தற்போது ஐகோர்ட்டு கூறியுள்ள தீர்ப்பை எதிர்த்து மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னர் கிரண்பெடி மேல்முறையீடு செய்ய அமைச்சரவை அனுமதிக்காது. தனிப்பட்ட முறையில் அவர் மேல்முறையீடு செய்யலாம். அதற்கான செலவை அவரேதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை ஏற்க கவர்னர் மறுத்து விட்டார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று விவசாய கடன் ரூ.20 கோடியை தள்ளுபடி செய்தோம். இதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சரவையில் முடிவு எடுத்து வாரிய தலைவர் பதவிகளை நிரப்பினோம். அந்த பதவியை மீண்டும் நிரப்புவதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடி வாரிய தலைவர் பதவிகளை நிரப்பினோம். இலவச அரிசி வழங்காததற்கும் கவர்னர் கிரண்பெடி பொறுப்பேற்க வேண்டும்.

கவர்னர் கிரண்பெடி புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இது இந்திய இறையாண்மைக்கு சரியானதல்ல.

புதுச்சேரி மாநில வளர்ச்சி, தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மீனவர்கள், ஏழை எளிய, சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி எதுவுமே செய்யவில்லை. மாநில வளர்ச்சிக்கு தடையாகத்தான் இருந்தார். எனவே இவைகளுக்கு பொறுப்பேற்று கவர்னர் கிரண்பெடி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்களே அவரை வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

ஐகோர்ட்டு தீர்ப்பை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தில் 2 மாத சம்பளம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இலவச அரிசி வழங்கப்படும்.

ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் புதுச்சேரியும் பங்கு கொள்கிறது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் நிவாரணத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் தாராளமாக முன்வந்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story