கோடை விடுமுறைக்கு சிவகாசியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை


கோடை விடுமுறைக்கு சிவகாசியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 7 May 2019 3:30 AM IST (Updated: 7 May 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களின் வசதிக்காகவும், வெளியூர்களில் உள்ள கல்லூரியில் சேருவதற்காகவும் சிவகாசியில் இருந்து சென்னை,கோவை, வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தேர்வு முடிந்து கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் உள்ள மாணவர்கள் தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மீதம் உள்ள நாட்களை இன்பமாக கழிக்க வெளியூர் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்களுக்கும், முக்கிய ஊர்களுக்கும் சிவகாசியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் சிறப்பு பஸ்கள் ஏதும் இயக்கப்படாததால் வெளியூர் பயணங்களுக்கு தனியார் பஸ்களில் செல்ல முன்பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் பஸ்களில் போதிய இடவசதி இல்லை. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகிறது.

தற்போது உள்ள நிலையில் பஸ் கட்டணத்தைவிட ரெயில் கட்டணம் குறைவாக இருக்கும் நிலையில் பெரும்பாலானோர் ரெயிலில் செல்வதற்கே விருப்பபட்டாலும் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முற்றிலுமாக முடிந்துவிட்டது. தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதும் தற்போது மிகுந்த சிரமமான நிலையிலேயே உள்ளது. மாணவர்களின் நலன் கருதி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல சிவகாசியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க விருதுநகர் மாவட்ட போக்குவரத்து கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகாசியில் இருந்து 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அதேபோல் தற்போதும் பிளஸ்–2 முடித்த பலர் கோவையில் உள்ள கல்லூரிகளில் இடம் தேடி அலைகிறார்கள். இவர்கள் சென்று வரவும் கூடுதல் பஸ்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே சிவகாசியில் இருந்து சென்னை, கோவை நகரங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிட்டு, முன் பதிவை தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story