புதுச்சேரிக்கு இடமாற்றத்தை கண்டித்து காரைக்கால் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்


புதுச்சேரிக்கு இடமாற்றத்தை கண்டித்து காரைக்கால் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 6 May 2019 8:09 PM GMT)

காரைக்கால் கிளை சிறையில் இருந்து, புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து,கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாதாகோவில் வீதியில் மாவட்ட கிளை சிறைச்சாலை உள்ளது. இது பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்டதால், சிறை கட்டிடத்தின் பல பகுதிகள் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், கட்டிட பராமரிப்பு பணியை தொடங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள 25 விசாரணை கைதிகளை தவிர்த்து, 15 தண்டனைக் கைதிகளை, பாதுகாப்பிற்காக, புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு, மாற்றம் செய்ய சிறை அதிகாரி மனோஜ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த, 15 தண்டனைக் கைதிகளும், அவர்களுக்கு நேற்று காலை வழங்கப்பட்ட உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கைதிகள் மாவட்ட கலெக்டரிடம் தங்கள் கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் போலீசார் நேற்று சிறைக்கு சென்று கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட்டு பகல் உணவு உண்ண ஒப்புக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் கிளைசிறையின் நிலை குறித்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது, ஒரு சில பகுதிகள் பழுதடைந்திருப்பது தெரியவந்தது. மேலும், புதுச்சேரி அரசின் சிறை விதிகளின்படி 3 மாதத்திற்கும் அதிகமான தண்டனை பெற்ற கைதிகளை கிளை சிறையில் அடைக்காமல், மத்திய சிறையில் அடைக்க வேண்டும். மேலும் இங்கு வசதிகளை மேம்படுத்தும் பணி மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போது கைதிகளுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் தண்டனைக் கைதிகளை புதுச்சேரிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நேற்று கைதிகள் கருத்து தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இடமாற்றம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறியதும், அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்றார்.

Next Story