மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் மேலும் 2 பேர் உயிரிழப்பா? சாவு எண்ணிக்கை 5-ஆனதால் பரபரப்பு


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் ஆக்சிஜன் கிடைக்காமல் மேலும் 2 பேர் உயிரிழப்பா? சாவு எண்ணிக்கை 5-ஆனதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 May 2019 5:15 AM IST (Updated: 9 May 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் மேலும் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை 5-ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே மதுரை அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டிடம் செயல்பட்டு வருகிறது. அங்கு விபத்தினால் காயம் அடைந்தவர்களுக்கும், தலைக்காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் மதுரை அருகே உள்ள பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 59), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (52), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம்(54), செல்லத்தாய்(55) உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கைசுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டிடத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால் சுவாசக்கருவி செயல் இழந்து, மல்லிகா, ரவிச்சந்திரன், பழனியம்மாள் ஆகியோர் ஆக்சிஜன் கிடைக்காமல் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த சம்பவம் நிகழ்ந்த பின்னர், அந்த சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோரும் பரிதாபமாக இறந்ததாக நேற்று அதிகாலையில் தகவல்கள் வெளியானதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களது உடல் களும் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதனால் இந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 5-ஆனதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் 3 பேர் மட்டுமே மின்தடை ஏற்பட்ட நேரத்தில் இறந்ததாகவும், மற்றவர்கள் மின்சாரம் இருந்த போதுதான் இறந்ததாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இறந்த 5 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை பகுதியில் திரண்டனர். இதனால் உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

மின்தடை காரணமாக 1 மணி நேரத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் வென்டிலேட்டர் கருவிகள் இயங்கவில்லை எனவும், இதனால் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் இறந்த மல்லிகாவின் மருமகன் கணேசன் (45) கூறியதாவது:-

என் மாமியாருக்கு, கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். திடீரென பெய்த மழையால் ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டபோது, அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சுவாசக்கருவி இயங்கவில்லை. ஜெனரேட்டரையும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரமணாக ஆஸ்பத்திரி இருளில் மூழ்கி இருந்தது. இதனால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. செல்போன் வெளிச்சத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டார். அதற்கு அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த வேறு சிலரும் உயிரிழந்தனர்.

நோயாளிகளின் சாவு விவரம் எங்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக எங்கள் யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசாரும் வந்து விட்டனர். இரவு 9.30 மணியளவில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி பிணவறைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எங்களுக்கு யாரையும் குறைகூற வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. வரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இறந்த ரவிச்சந்திரனின் உறவினர் மாரீஸ்வரன் கூறுகையில், “கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இரவு 8 மணிக்கு ஆபரேசனுக்கு ஒரு சில மருந்துகளை எழுதி கொடுத்தார்கள். அதற்கான மருந்துகளை வெளியில் உள்ள கடையில் வாங்கி வந்தோம். இந்தநிலையில், மழையால் ஏற்பட்ட மின்தடையால், ரவிச்சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில் ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பழனியம்மாளின் உறவினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். வரும் காலங்களில் இதுபோல், எந்த ஆஸ்பத்திரியிலும் நடக்காமல் இருக்க அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மின்தடை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story