கோவை நிதி நிறுவனத்தில், நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு 3 நாள் போலீஸ் காவல் - 200 பவுன் மாயமானது குறித்து விசாரணை
கோவை நிதி நிறுவனத்தில் நகைகளை கொள்ளையடித்த வாலிபரை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 200 பவுன் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 803 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண் ஊழியர் ரேணுகாதேவி (வயது 26), அவருடைய கள்ளக்காதலன் சுரேஷ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளைப்போன 803 பவுனில் 603 பவுன் தான் மீட்கப்பட்டது. மீதி 200 பவுன் என்ன ஆனது என்பது பற்றி கைது செய்யப்பட்ட சுரேஷிடம் போலீசார் விசாரித்தனர்.
அதற்கு அவர், கொள்ளையடித்த நகைகள் முழுவதையும் உருக்கினேன். அதில் 603 பவுன் தங்கம் தான் இருந்தது என்று கூறினார். இதனால் கொள்ளை போன 803 பவுன் நகைகளையும் போலீசாரால் மீட்க முடியவில்லை. இதனால் அடகு வைத்தவர்களுக்கு நகைகளை திருப்பி கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
எனவே நகைகளை உருக்கியதில் 200 பவுன் மாயமானது குறித்து சுரேஷிடம் விசாரணை நடத்த ராமநாதபுரம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கொள்ளையன் சுரேஷிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சுரேஷிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்து மாஜிஸதிரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் சுரேஷை விசாரணைக்காக ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 803 பவுனில் 200 பவுன் நகைகளை சுரேஷ் வேறு எங்கேயாவது பதுக்கி வைத்திருக்கிறாரா? அல்லது விற்று விட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைப்போன 803 பவுனில் கல் வைத்த நகைகள், அரக்கு வைத்த நகைகள் மற்றும் 18 காரட் தங்க நகைகள் இருந்துள்ளன. எனவே தனியார் நிதி நிறுவனத்தில் யார்-யார்? எவ்வளவு நகைகளை அடகு வைத்தனர்? அவர்கள் வைத்தது 916 தரத்தை சேர்ந்த நகைகளா? அல்லது 18 காரட் சாதாரண நகைகளா? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story