மகப்பேறு உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய அரசு செவிலியருக்கு 3 ஆண்டு ஜெயில்


மகப்பேறு உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய அரசு செவிலியருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

மகப்பேறு உதவித்தொகை விண்ணப்பத்தை பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு 3 ஆண்டு ஜெயிலில் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர், 

திருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி அண்ணாநகரை சேர்ந்தவர் முனியப்பன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (வயது 26). இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து சத்யா கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி 6-வது மாத மருத்துவ பரிசோதனைக்காக சத்யா தனது கணவர் முனியப்பனுடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்தார்.

அரசு வழங்கும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனை அங்கு செவிலியராக பணிபுரிந்த பல்லவள்ளி கிராமத்தை சேர்ந்த பத்மாவதியிடம் (54) கொடுத்து பதிவு செய்யும்படி இருவரும் கேட்டுக்கொண்டனர்.

அப்போது பத்மாவதி அந்த விண்ணப்பத்தை பதிவு செய்யவும், அதனை தொடர்ந்து பரிசீலனை செய்யவும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் 1,500 ரூபாய் தருவதாகவும், பணத்தை சில நாட்களில் ஏற்பாடு செய்து கொண்டு மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்மாவதியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டுகள் 3-யை முனியப்பனிடம் வழங்கி, அதனை பத்மாவதியிடம் கொடுக்க செய்தனர். பத்மாவதி பணத்தை பெற்றபோது மறைந்து நின்று கொண்டிருந்த லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லஞ்சம் வாங்கிய அரசு செவிலியர் பத்மாவதிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த காவலுடன் பத்மாவதி வேலூர் பெண்கள் தனி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story