ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 6:56 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி சட்டரீதியான போராட்டம் நடத்துவது என கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகா மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் சமுதாய கூடத்தில் கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகா மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செருதூர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியும், சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்துவது.

ஒருங்கிணைப்பு குழு

நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து, மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான அக்கரைப்பேட்டை மீனவ பொறுப்பாளர்கள் தலைமையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கீழ்வேளூர், வேதாரண்யம் தாலுகா மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள் சங்கம், விவசாய அமைப்பினர், தேசிய மீனவ பேரவை பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story